
கோலாலம்பூர், நவம்பர்-22 – கூட்டரசு நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் நோக்கிச் சென்ற Mercedes-Benz கார் சறுக்கி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகப் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர்
Shamsudin Mamat தெரிவித்தார்.
அந்தத் தங்க நிற Benz கார் கட்டுப்பாட்டை இழந்து மேடான பகுதியில் மோதிச் சுழன்றதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு உள்ளூர் பெண்களும் பின்பக்கக் கண்ணாடி வழியாகத் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டிச் சென்ற 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.
அவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



