கூலிம், மே 20 – கெடா, கூலிம், ஹைடெக் பூங்காவில், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் இடத்தில், ஆலய உரிமை பிரச்சனைகளை கேட்டறிய, மலேசிய ஐக்கிய உரிமை கட்சி நேரடியாக களமிறங்கியதாக, அதன் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.
கூலிம் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் தேவைப்படுவதால், கோவிலை வேறு இடத்திற்கு மாற்றுமாறு நில அலுவலகம் பணித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், சைம் டார்பி பிளான்டேஷன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அக்கோயில் கட்டப்பட்டது. அதனால், அந்த கோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதல்ல.
அந்த கோவிலை இடம்மாற்றம் செய்ய வழங்கப்பட்டிருக்கும் நிலம் தற்போதைய இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில், இதர நான்கு கோவில்களுக்கு அருகில் உள்ளது.
எனினும், தற்போது அந்த கோவில் இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாமல், இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடமாக இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் விரும்புகிறார்கள்.
அதனால், கோவிலை இடமாற்றம் செய்வதற்கு ஏற்ற இடத்தைக் அடையாளம் காணும் பொறுப்பை, மாநில சீன, பூர்வகுடி, சயாமிய சமூகங்களின் பொறுப்பாளராக இருக்கும் வோங், ஏற்றுக் கொள்வது நல்லது என இராமசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மணி 4.30 வாக்கில், கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் தம்முடன், உரிமை கட்சியின் இடைக்கால செயலவை உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், சதீஸ் முனியாண்டி, குணசேகரன், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டதாக இராமசாமி கூறினார்.
கோவில் இடமாற்றத்திற்கு சாதகமான மற்றும் பரஸ்பர நிலையில் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வை காண, கெடா மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கோவில் நிர்வாகத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குவதற்கு உரிமை கட்சி காத்திருக்கிறது.
அதனால், அது தொடர்பில், கெடா மந்திரி பெசார், சனுசிக்கு கடிதம் எழுதவும், மாநிலத்தில் உள்ள இதர இந்துக் கோவில்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராயவும், உரிமை கட்சியின் பொதுச் செயலாளர் சத்தீஸ் பணிக்கப்பட்டுள்ளதாக, இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.