குவாந்தான், ஏப்ரல் 8 – பஹாங், கெந்திங் மலையில் உள்ள கேசினோ சூதாட்ட மையத்தில் சனிக்கிழமை கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் நான்கு ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
10 பேரடங்கிய இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கலவரத்தில் முடிந்ததாக போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் ஆடவர்களான அவர்கள் 23 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பெந்தோங் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
கைதான நால்வரும் விசாரணைக்காக 2 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தின் போது கையில் கிடைத்தப் பொருட்களைக் கொண்டு அடித்துக் கொண்டதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவ இடத்தில் CCTV கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் எஞ்சியவர்கள் தேடப்படுவதாக அவர் சொன்னார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீசை தொடர்புக் கொண்டு உதவுமாறும் Zaiham கேட்டுக் கொண்டார்.
அவ்விரு கும்பல்களும் மோதிக் கொள்வதைக் காட்டும் 40 வினாடி காணொலி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.