கோலாலம்பூர், மே 30 – கெப்போங் வட்டாரத்தில் வர்த்தக கடைகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த Ruben திருட்டுக் கும்பல் முறியடிக்கப்பட்டது. கடந்த 2 மாத காலமாக செயல்பட்டு வந்த இக்கும்பலின் தலைவன் உட்பட அறுவர் இம்மாதம் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றவியல் விசாரணைத்துறை தலைவர் டத்தோ Habibi Manjiji தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்வரை கெப்போங் வட்டாரத்தில் வர்த்தக மையங்களை உடைத்து திருடப்படும் சம்பவங்கள் குறித்த 15 புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புக் போலீஸ் குழு ஒன்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 28 முதல் 38 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
இக்கும்பலிடமிருந்து வாகன உபரி பாகங்கள், மடி கணினி, ரொக்கத் தொகை மற்றும் அவர்களின் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த புரோடுவா கஞ்சில் கார் மற்றும் வேன் ஒன்றும் பறிமுல் செய்யப்பட்டது. உணவகங்கள், வாகன உபரி பாகங்களை விற்பனை செய்யும் கடைகளை உடைத்து கொள்ளையடிப்பது இக்கும்பலின் இலக்காக இருந்தது. இக்கும்பல் அதிகாலை ஒரு மணிக்கும் விடியற்காலை 5 மணிக்குமிடையே தங்களது நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக Habibi கூறினார்.