
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய 7வது மகனை பராமரிக்க அவனது தந்தை இணக்கம் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவனின் நலனைக் கண்காணிக்க சமூக நலத்துறை அவனது தந்தையின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தும் என கெடா சமூக நல, மகளிர், குடும்பம் மற்றும் ஒற்றுமை குழுவின் தலைவரான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஹலிமதோன் ஷாஹடியா ( Halimaton Shaadiah ) கூறினார்.
அந்த சிறுவன் அதிர்ச்சி மற்றும் கழுத்தில் ஏற்பட்ட காயத்தினால் இன்னும் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அச்சிறுவனின் தந்தை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் தனது மகனை பராமரிப்பதற்கு அவர் முன்வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு மணி 11.05 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தாமான் பேராக்கில் உள்ள ஒரு வீட்டில் தனது 4 வயது மகளை கொலை செய்த பெண் ஒருவர் பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அந்த சம்பவத்தில் தனது மகனையும் தொழிற்சாலை ஊழியரான அந்த பெண் தூங்கில் தொங்கவிட்ட போதிலும் அச்சிறுவனின் கழுத்தில் கயிறு சிக்கி வலியினால் கதறியதைக் கேட்டு அண்டை வீட்டுக்காரரின் உதவியினால் அச்சிறுவன் காப்பாற்றப்பட்டதாக இதற்கு முன் கூலிம் போலீஸ் தலைவர் Superintendan சுல்கிப்லி அஸிஸான் கூறியிருந்தார்.



