
கோலாலம்பூர், ஜூன் 23 – கோம்பாக், Kepong அருகிலுள்ள தாமான் புக்கிட் தேசா (Taman Bukit Desa) பகுதியில், ராணுவ உடை போல அணிந்து, ஆயுதம் ஏந்திய நிலையில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 4.31 மணியளவில் போலீசாருக்கு புகார் கிடைத்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் இப்ராஹிம் ஹுசின் ( Ibrahim Husin ) தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு தண்டனைச் சட்டத்தின் 140-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அனுமதியின்றி ராணுவம், கடற்படை அல்லது விமானப்படை சீருடைகளை அணிவது குற்றமாகும்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், போலி ஆயுதங்களை வைத்திருப்பது அல்லது இறக்குமதி செய்வது தொடர்பாக 1960ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டம் பிரிவு 36-ன் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த அல்லது அது தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பிரகாஷ் சிதம்பரம் அல்லது கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையக கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொள்ளலாம்.
முன்னதாக, 14 விநாடிகள் கொண்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதில், ராணுவ சீருடை அணிந்த ஒருவர் தோளில் துப்பாக்கியுடன் நடமாடுவது பதிவாகியிருந்தது.



