
கோலாலம்பூர், மார்ச்-27- மடானி அரசாங்கத்தின் மதிநுட்பத்தால் மஸ்ஜிட் இந்தியா ஆலய மற்றும் மசூதி விவகாரம் நல்லிணக்க உணர்வோடு தீர்வை எட்டியுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆட்சியின் கீழ் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியதன் பலனே இதுவாகும்.
பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு கோயிலுக்கும் தனியார் நிறுவனத்துக்குமான பிரச்னைதானே என ஒதுங்கி விடாமல், அரசாங்கம் அதில் தலையிட்டு சுமூகமான தீர்வுக்கு முயற்சிகளை மேற்கொண்டது.
ஒரு மாத காலமாக அப்பேச்சுவார்த்தையில் பிரதமரின் பிரதிதியாக தானே நேரில் பங்கேற்றதாகக் கூறிய சண்முகம், அதுவோர் இக்கட்டானச் சூழல் என்பதை ஒப்புக் கொண்டார்.
இருந்த போதிலும், எந்தவோர் இறுக்கமான சூழலும் ஏற்படாத வண்ணம், நாட்டின் நல்லிணக்கம் பேணப்படும் வகையில் அனைவருக்கும் நியாயமான தீர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
தீர்வின் ஓர் அங்கமாக DBKL, கோயில் நிர்வாகத்துக்கு 4,000 சதுர அடி நிலத்தை வழங்கி, இந்துக்களின் தேவை தொடர்ந்து பேணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதே சமயம், மஸ்ஜிட் இந்தியாவில் மடானி மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் பிரதமர் தலைமையில் இன்று சிறப்பாக நடந்தேறியுள்ளது.
இது சமூகங்களுக்கிடையிலான சுபிட்சத்தைக் காட்டும் மற்றொரு மைல் கல்லாகும் என, சண்முகம் வருணித்தார்.
இருப்பினும், இந்த தீர்வை, இனி வரும் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாகக் கொண்டு யாரும் செயல்படக் கூடாது.
நாம் நமது உரிமைகளை நிலைநிறுத்தும் அதே வேளை, சட்டத்துக்கு உட்பட்டு சரியான முறையில் செயல்படுவதும் அவசியமாகும்.
இதுபோன்ற சிக்கல்கள் இனியும் எழாதவாறு பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் கடமையும் நம்மிடமுள்ளது; நாட்டின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் நாமும் பொறுப்பு என்பதை அனைவரும் புரிந்துசெயல்பட வேண்டுமென சண்முகம் கேட்டுக் கொண்டார்.