Latestமலேசியா

கோயில் விவகாரங்கள்: தேசிய இந்து அறப்பணி வாரியத்தை அமைக்க அன்வாருக்கு ராமசாமி கோரிக்கை

கோயில் விவகாரங்கள்: தேசிய இந்து அறப்பணி வாரியத்தை அமைக்க அன்வாருக்கு ராமசாமி கோரிக்கை

கோலாலாம்பூர், பிப்ரவரி-12,

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய அளவில் ஓர் இந்து அறப்பணி வாரியத்தை அமைப்பதை பரிசீலிக்க வேண்டும் என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது நாடு முழுவதும் கோயில்களை ஒழுங்குமுறைப்படுத்த உதவுமென அவர் சொன்னார்.

பினாங்கில் முன்பு தாம் துணை முதல்வராக இருந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அளவிலும் அதனை அமைத்திட மடானி அரசாங்கம் வழிகாண வேண்டுமென்றார் அவர்.

சிலாங்கூர், ரவாங் முனீஸ்வரர் கோயில் தனிநபர்களால் இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ராமசாமி அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவ்வேளையில், அனுமதியில்லாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களை கையாள்வதில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது மதிநுட்பத்தையும் அனுபவத்தையும் சிறப்பாகப் பயன்படுத்துவதாக ராமசாமி பாராட்டினார்.

சிலர் இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தினாலும், சுல்தான் இப்ராஹிம் மதங்களுக்கு இடையிலான புரிதலும் ஒத்துழைப்பும் தான் தீர்வின் முக்கியக் அம்சம் என நம்புகிறார்.

2018 ல் ஜோகூர், மாசாயில் ஓர் இந்துக் கோயில் நில உரிமையாளர்களால் இடிக்கப்பட்டபோது, சுல்தான் இப்ராஹிம் நேரடியாக தலையிட்டு, கோயில் நிர்வாகத்திற்கு மாற்று நிலம் வழங்கினார்.

இந்த நடவடிக்கைக்காக, இந்நாட்டு இந்து சமூகத்தின் சுல்தான் இப்ராஹிமுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ராமசாமி, . இன்று கோயில் விவகாரங்கள் அமைதியாக தீர்க்கப்பட்ட மாதிரி மாநிலமாக ஜோகூர் பார்க்கப்படுவதை சுட்டிக் காட்டினார்.
கலந்துரையாடல், அதிகாரம் மற்றும் மரியாதை மூலம் மத உணர்வுகளை கையாள்வதில் சுல்தான் இப்ராஹிம் காட்டிய முன்னுதாரணத்திற்கு ராமசாமி நன்றியும் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!