
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-23 – கோலாலம்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஆலயத்தை நோக்கி பக்தர்கள் வரத் தொடங்கிய நிலையில், நேரம் செல்லச் செல்ல ஆலய வளாகமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் பக்தர்கள் வெள்ளமாகக் காட்சியளித்தன.

வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், ஆலய விமானம் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட தருணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு தரிசித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சுவர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.40 மணிக்குள்ளான சுப வேளையில் நடைபெற்றது.
சுமார் RM4 மில்லியன் செலவில் முழுமையான கருங்கல் ஆலயமாக மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீ கணேசர் ஆலயம், பாரம்பரிய ஆலயக் கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் புதிய பொலிவுடன் பக்தர்களுக்கு கம்பீரமாகக் காட்சியளித்தது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ என். சிவகுமார் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
மகா கும்பாபிஷேகம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது குறித்து தான் ஸ்ரீ நடராஜா வணக்கம் மலேசியாவிடம் மனநிறைவைப் பகிர்ந்து கொண்டார்.
நாட்டின் முக்கியமான விநாயகர் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம் முழுமையான கருங்கல் ஆலயமாக மாற்றம் கண்டிருப்பது, அதன் வரலாற்றுச் சிறப்பையும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் மேலும் உயர்த்தியுள்ளதாக டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தன.
பெருமளவில் தயாரிக்கப்பட்ட உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதுடன், வாழை இலையில் அமர்ந்து உணவருந்துவதற்கும் வசதியும் இருந்தன.
இதனிடையே, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மகா கும்பாபிஷேகத்தை நேரில் காண முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக பக்தர்களும் தெரிவித்தனர்.
பல தலைமுறைகளாக மலேசிய இந்து சமூகத்தின் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பின்னிப் பிணைந்துள்ள கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்திற்கு இது 6-ஆவது மகா கும்பாபிஷேகம் ஆகும்.
யாகசாலை பூஜைகள் முதல் புனித நீர் ஊற்றும் உச்ச தருணம் வரை, அன்னதானம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை வரை, இன்றைய நாள் முழுவதும் ஆலய வளாகம் பக்தியும் பாரம்பரியமும் ஒன்றிணைந்த ஆன்மிகத் திருவிழாவாக மாறியது.
புதிய கருங்கல் வடிவில் எழுந்து நிற்கும் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம், இனி வருங்கால தலைமுறைகளுக்கும் சமயம், பாரம்பரியம், கட்டடக்கலை மற்றும் பக்தியின் அடையாளமாகத் தொடர்ந்து விளங்கும்.



