கோலாலம்பூர், ஜூலை-18, கொள்கலன் லாரியில் கொண்டு வரப்பட்ட போலி வர்த்தக முத்திரையைக் கொண்ட ஆயிரக்கணக்கான துணிமணிகளுக்கு, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) சீல் வைத்துள்ளது.
நேற்றிரவு கோலாலம்பூர், ஜாலான் கெனாங்கா, லோரோங் மெர்பாவில் 20 வங்காளதேசிகள் கொள்கலனொன்றிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது, அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
740 பொட்டலங்கள் பரிசோதிக்கப்பட்டதில், 9,100 jeans கால்சட்டைகள் அடங்கிய 210 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 406,000 ரிங்கிட் என கோலாலாம்பூர் KPDN-னின் தலைமை அமுலாக்க அதிகாரி நூருல் ஷாரினா மொஹமட் அனுவார் ( Nurul Sharina md Anuar) தெரிவித்தார்.
போலி முத்திரை ஒட்டப்பட்ட துணிப் பொட்டலங்கள் சுங்கத் துறை அதிகாரிகளின் கண்ணில் படாதிருக்க ஏதுவாக, கொள்கலனின் முன்புறத்தில் அவை சாமர்த்தியமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கிள்ளான் துறைமுகம் வாயிலாக வங்காளதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்தத் துணிமணிகள் ஜாலான் கெனாங்கா பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் விநியோகிப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த கொள்கலன் லாரியின் ஓட்டுநரான 40 வயது உள்ளூர் ஆடவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.