ஷா ஆலாம், ஏப்ரல் 25 – பேராக், கோலா குபு பாருவில், களமிறங்கவுள்ள தனது வேட்பாளர் பாங் சாக் தாவோவின் போலி முகநூல் கணக்கை மெட்டா மூட வேண்டும் என டிஏபி கோரிக்கை விடுத்துள்ளது.
சில பொறுப்பற்ற தரப்பினரால் அந்த போலி கணக்கு உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
எதிர்வரும் கோலா குபு பாரு இடைத்தேர்தலின் போது, கட்சி வேட்பாளர்கள் அல்லது தலைவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, தவறான தகவல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் போலி கணக்குகள் அதிகமாக உலா வரும் சாத்தியம் இருப்பதாக, டிஏபி கட்சியின் தேசிய தொடர்பு செயலாளர் தியோ நீ சிங் கூறியுள்ளார்.
கோலா குபு பாரு வேட்பாளராக நேற்றிரவு தான் பாங் சாக் தாவோ அறிவிக்கப்பட்டார். இன்று அவரின் புகைப்படங்களை பயன்படுத்தி யாரோ ஒருவர் முகநூலில் போலி கணக்கை உருவாக்கியுள்ளார்.
AI செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, போலி கணக்குகளை உருவாக்குவது மிகவும் எளிதாகி விட்டது. எனவே, எந்த ஒரு செய்தியையும், நம்புவதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை உறுதிச் செய்துக் கொள்ளுமாறு, தகவல் தொடர்பு துணையமைச்சருமான தியோ நீ சிங் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், கோலா குபு பாரு வேட்பாளரை, https://www.facebook.com/XiaoTaoUbahTV எனும் இணைப்பு வாயிலாக பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் எனவும் தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார்.
வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங்கின், செய்தி தொடர்பாளரான பாங் சாக் தாவோ, கோலா குபு பாரு இடைத் தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக நேற்றிரவு அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.