ஜியோர்ஜ்டவுன், ஜூன்-24, வெள்ளிக்கிழமையன்று சக நாட்டு ஆடவர் கடத்தப்பட்டது தொடர்பில் போலீஸ் 5 வங்காளதேச ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளது.
20 முதல் 35 வயதிலான அவர்கள் சிலாங்கூர் ஷா ஆலாமில் கைதானதாக பினாங்கு, தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமிட் (ACP Razlam Ab Hamid) கூறினார்.
தனது மகன் கடத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், 2 லட்சம் ரிங்கிட் பிணைப்பணம் கொடுத்தால் மட்டுமே மகனை உயிருடன் பார்க்க முடியுமென்றும் கூறி மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாக, பினாங்கு ஜியோர்ஜ்டவுனில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் 50 வயது நபர் வெள்ளிக்கிழமை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து துப்புத் துலக்கிய போலீஸ் ஷா ஆலாமில் ஒரு வீட்டை முற்றுகையிட்டு 20 வயது இளைஞனைப் பாதுகாப்பாக மீட்டு, 5 சந்தேக நபர்களைக் கைதுச் செய்தது.
அவ்விளைஞன் தந்தைக்கே தெரியாமல் வேலை தேடி மலேசியா வந்ததாகத் தெரிகிறது.
கைதான வங்கதேசிகள் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.