ரானாவ், ஜூன் 24 – சபா, குண்டாசாங், மெசிலாவிலுள்ள (Mesilau), கினபாலு மலை அடிவாரத்தில் இன்று காலை நிலச்சரிவு சம்பவம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அந்த நிலச்சரிவால், ரானாவ் ஆற்றில் கலக்கும் மெசிலாவ் ஆற்று நீர், சேறும் சகதியுமாக மாறியது.
2015-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கினாபாலு மலையை மையமாக கொண்ட, ரிக்டர் அளவைக் கருவியில் 5.9-ஆக பதிவான நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட அதே மாதிரியான சகதி வெள்ளமாக இது கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவை அடையாளம் கண்டதன் வாயிலாக, அச்சம்பவம் குறித்து தெரிந்து கொண்டதாக, ரானாவ் தீயணைப்பு மீட்பு நிலைய தலைவர் ரிட்வான் முஹமட் தாயிப் (Ridwan Mohd Taib) தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அந்த நிலச்சரிவு சம்பவத்தில், பொது உடமைகள் எதுவும் சேதமடையவில்லை.
எனினும், சம்பவ இடத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.