
கோலாலம்பூர், நவ -10,
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காடு பங்கை மதிக்கத் தவறியதன் மூலம் புத்ராஜெயா சட்டவிரோதமாக செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா இல்லையா என்பதை கூட்டரசு அரசாங்கம் நாளை முடிவு செய்யும். நாளை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முக்கியக் கட்சியான GRS எனப்படும் Gabungan Rakyat Sabah மற்றும் பல தரப்பினரும் இந்த முடிவை மேல்முறையீடு செய்வதற்கு எதிராகவும், அதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்துமாறு வலியுறுத்தினர். கூட்டரசு வருவாயில் 40 விழுக்காடு பங்கு தொடர்பில் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தின் நிலைப்பாட்டின் காரணமாக, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் பதவியில் இருந்து உப்கோ (Upko ) தலைவர் எவோன் பெனடிக் (Ewon Benedick ) விலக வழிவகுத்தது.



