கோலாலம்பூர், டிசம்பர்-10 – தமக்கு வந்த 681 மில்லியன் டாலர் ‘நன்கொடைப்’ பணத்தில் 620 மில்லியன் டாலரை 2013 பொதுத் தேர்தலுக்குப் பிறகு திருப்பி தந்து விட்டதாக, டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல் முடிந்து அரசியல் தேவைகள் எதுவும் இல்லாத காரணத்தால், அப்பணத்தைத் தாம் திருப்பித் தந்ததாக அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.
Tanore Finance Corporation வாயிலாக மறைந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவிடமிருந்து வந்த ‘நன்கொடையென்றே’ அதனை தாம் உறுதியாக நம்புவதாக, 1MDB முறைகேட்டு வழக்கில் தனது தற்காப்பு வாதத்தின் போது நஜீப் கூறினார்.
அந்த நன்கொடைகளை அரசியல் நோக்கக்கங்களுக்காவும் நற்காரியங்களுக்காகவும் நான் பயன்படுத்தினேன் என்றார் அவர்.
எனக்கு அள்ளிக் கொடுப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான், ஸ்பெயின் மன்னர் Juan Carlos-சுக்கு மன்னர் அப்துல்லா 100 மில்லியன் டாலர் நன்கொடையை வழங்கியதாக, நஜீப் கூறிக் கொண்டார்.
அந்த நன்கொடைகளைப் பெறுவதில் வெளிப்படையாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தான், உள்ளூர் வங்கி கணக்குகளைத் திறந்தேன்.
உண்மையிலேயே 1MDB பணத்தை நான் கையாட நினைத்திருந்தால், வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகளைத் திறந்திருக்க மாட்டேனா என நஜீப் கேள்வி எழுப்பினார்.
அதோடு, வங்கிக் கணக்குகளில் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை கண்டறியப்பட்டிருந்தால், அது குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பேங்க் நெகாராவோ அல்லது AmBank-ங்கோ அப்படி செய்யத் தவறி விட்டதாக நஜீப் கூறிக் கொண்டார்.
2011 பிப்ரவரி முதல் 2014 டிசம்பர் வரை நஜீப்பின் AmBank வங்கிக் கணக்குகளில் போடப்பட்ட 2.28 பில்லியன் ரிங்கிட் பணம், உண்மையில் 1MBD நிறுவனத்தில் முறைகேடு செய்யப்பட்டதெனக் கூறி, அவர் மீது 25 அதிகார முறைகேடுகள் மற்றும் பணச்சலவைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.