
செப்பாங் – ஆகஸ்ட்-21 – சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக, ஆங்கில மொழி ஆசிரியை ஒருவர் செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
பொது அமைதியைக் கெடுப்பதோடு, மற்றவர்களும் குற்றமிழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் TikTOK SHA_Abrienda என்ற டிக் டோக் கணக்கு வாயிலாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக, சிலாங்கூர், ரவாங்கில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 39 வயது அவ்வாசிரியை குற்றம் சாட்டப்பட்டார்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி அவர் பதிவேற்றியக் கருத்து, KLIA-வில் பணிபுரியும் போலீஸ் அதிகாரியின் கண்ணில் பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், Siti Hajar Shaharuddin அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 4,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்; வழக்கு அக்டோபர் 4-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஈராண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.