பேங்கோக், ஆகஸ்ட் -25, தாய்லாந்து சாலைகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சூட்கேஸுகளில் (Motorised suitcase) பயணிப்பது சட்டப்படி குற்றமாகுமென, அந்நாட்டு போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
மோட்டார் சூட்கேஸை வாகனமாகக் கருத முடியாது; பதியவும் முடியாது.
எனவே பொது சாலைகளில் அவற்றில் பயணிப்பது, போக்குவரத்தை மறைப்பதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பேங்கோக்கில், விமான நிலையமொன்றின் அருகே பரபரப்பான சாலையில் பெண்ணொருவர் மோட்டார் சூட்கேஸில் பயணம் செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து, அவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒரு சூட்கேஸில் அவர் அமர்ந்துக் கொள்ள, இன்னொன்றை அது பின்னால் இழுத்து வருகிறது.
தலையில் ஹெல்மட் இல்லை; அவர் பாட்டுக்கு கையில் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே போகிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்களுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம், இன்னொரு பக்கம் ஆத்திரம்.
அப்பெண்ணின் நடவடிக்கை அவருக்கும் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாமென ஏராளமானோர் கவலைத் தெரிவித்தனர்.
அவரை போலீஸ் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்றும் சிலர் கேள்வி கேட்கின்றனர்.
இந்நிலையில், வைரலான அப்பெண் சீன நாட்டு சுற்றுப்பயணி என்றும் வியாழக்கிழமையன்றே அவர் தாயகம் திரும்பி விட்டதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.