புக்கிட் மெர்தாஜம், ஜூலை 11 – Bukit Mertajam , Taman Sri Rambai வீடமைப்பு குடியிருப்பு பகுதிக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. நேற்று மாலை மணி 5.30 அளவில் இதனை அறிந்த பொதுமக்கள் இது குறித்து மேல் நடவடிக்கைக்காக போலீசாருக்கு தெரிவித்தனர். பூட்டப்பட்டிருந்த அந்த காரை திறக்கும்படி உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த குழுவினர் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி அக்காரின் கதவை திறந்தனர்.
அந்த காரின் முன்புற இருக்கையில் காணப்பட்ட அந்த இரு பெண்களின் சடலங்களும் மேல் நடவடிக்கைக்கக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 20 வயதுக்குட்பட்ட அந்த இரண்டு பெண்களின் உடல்களும் உப்பிய நிலையில் காணப்பட்டதால் அவர்கள் ஐந்து நாட்களுக்கு முன் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர் என நம்பப்பட்ட போதிலும் அந்த இருவரின் சடலங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சவப் பரிசோதனைக்காக அவர்களின் உடல்கள் புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையின் சவங்கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.