ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-8 – 6 வயது சிறுமி அல்பர்டைன் லியோ ஜியா ஹுய் (Albertine Leo Jia Hui) கடத்தல் தொடர்பில் வேலையில்லாத ஆடவன் மீது இன்று ஜோகூர் பாருவில் உள்ள 2 வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
அச்சிறுமியைக் கடத்தியது, அடைத்து வைத்தது, பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளை அவ்வாடவன் எதிர்நோக்கியுள்ளான்.
தவிர, சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 31 வயது லியாங் வின் சோன் (Leang Win Son) அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினான்.
அவனை 8 குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 50,000 ரிங்கிட்டில் சந்தேக நபரை ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி.
சாட்சியைத் தொந்தரவு செய்யக் கூடாது, மாதா மாதம் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும், அனைத்துலகக் கடப்பிதழ் இருந்தால் அதனை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குற்றவியல் சட்டத்தின் 292-வது பிரிவின் கீழ் மேலும் 7 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அவன் கூலாய் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டான்.