சிறைக்குச் சென்று இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவு; ஆறாத வலியும் வேதனையும் கடவுளுக்கே வெளிச்சம் என நஜீப் பகிர்வு

காஜாங் – ஆகஸ்ட்-23 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 3 ஆண்டுகள் அல்லது 1,096 நாட்கள் நிறைவடைகின்றன.
72 வயதாகும் நஜீப், SRC International நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டார்.
சிறைத்தண்டனை பின்னர் பாதியாகக் குறைக்கப்பட்டு அபராதமும் 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டுக்குக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த 3 ஆண்டு காலமாக இரும்புத்திரைக்குப் பின்னால் தனது வாழ்க்கைச் சூழலை, கவிதை நடைபோன்ற எழுத்தில் நஜீப் பகிர்ந்துள்ளார்.
விடியற்காலையில் தொழுகைக்கான அழைப்பு முதல் sejadah துணி மட்டுமே மூடப்பட்ட குளிர்ந்த சிமென்ட் தரை வரை, அவரது அன்றாட தொழுகைகளும் பிரார்த்தனைகளையும் அவர் அதில் விவரித்தார்.
அந்த sejadah துணியே சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் தனது ‘விசுவாசமான நண்பர்’ என்று நஜீப் வருணித்தார்.
தொழுகைகளில் அமைதியைத் தேடும் போதும், மன வலி வேதனைகளை முறையிடும் போதும், தம்முடன் உற்றத் தோழனாக உடன் வருவதே அந்த sejadah துணியே என்றார் அவர்.
“என் மனதில் உள்ள வலியும் வேதனையும் ஆறாத வடுக்களும் இறைவன் ஒருவனே அறிவான்” எனக் குறிப்பிட்ட நஜீப், குடும்பத்தார் மற்றும் மக்களின் பிராத்தனைகள் சிறையில் தமக்கு மனோதிடத்தையும் தைரியத்தையும் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
‘இருள் விலகி’ என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்… ஆனால் அது எப்போது என்ற கேள்வியுடன் நஜீப் தனது உரைநடையை முடித்தார்.