
ஷா ஆலாம், மே-7-சிலாங்கூரில் திறந்தவெளி பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான தனது அதிருப்தியை சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களின் நலனைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் தூய்மையை உறுதிப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
புதிய பன்றி வளர்ப்புப் பகுதிகளைத் திறப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்யுமாறு மாநில அரசுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இடையூறுகளைத் தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சிலாங்கூரில் பன்றி இறைச்சியை உண்ணும் முஸ்லீம் அல்லாத மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய, சரவாக் போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்யுமாறு அவர் பரிந்துரைத்தார்.
சிங்கப்பூரில் கூட பன்றி வளர்ப்பு இல்லை; அந்தக் குடியரசே பன்றி இறைச்சிகளை வெளியிலிருந்து தான் இறக்குமதி செய்வதாக அவர் சொன்னார்.
சுல்தான் ஷராஃபுடின் சார்பில் அவரின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ Mohamad Munir Bani இன்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.



