கோலாலம்பூர், ஆக 13 – பல்வேறு காரணங்களால் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் மாற்றத்திற்கான சாத்தியம் எப்போதும் இருப்பதாக சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் ஷாரி (Amirudin Shari) தெரிவித்திருக்கிறார். நோய், மரணம் அல்லது இதர காரணங்களால் ஆட்சிக் குழு மாற்றத்திற்கான சாத்தியம் எப்போதும் இருக்கிறது. இது நடக்காது என்று தாம் கூறமுடியாது என அவர் தெரிவித்தார். தற்போது எனக்கு சிலாங்கூரில் வலுவான ஆட்சிக்குழு உள்ளது. நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து சேவையை மேம்படுத்த வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என அமிருடின் தெரிவித்தார்.
இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ பி.கே.ஆர் மற்றும் DAP -யிலிருந்து இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மாற்றப்படும் சாத்தியம் இருப்பதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். எனினும் ஆட்சிக்குழு மாற்றம் குறித்த வதந்திகளை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களான நஸ்வான் ஹலிமி (Najwan Halimi) மற்றும் ஜமாலியா ஜமாலுடின் ( Jamaliah Jamaluddin) மறுத்தனர். தாமோ அல்லது நெகிரி செம்பிலான் மந்திரிபெசார் அமினுடின் ஹருன் ( Aminuddin Harun) கூட்டரசு அமைச்சரவையில் இணையக்கூடும் என்று வெளியான ஆருடங்கள் குறித்து வினவப்பட்டபோது சிலாங்கூர் திட்டங்கள் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தமது நடப்பு நிலையை தொடர விரும்புவதாகவும் அமிருடின் மறுமொழி தெரிவித்தார்.