Latestமலேசியா

சிலாங்கூர் ஜெராமில் இரு சிறுமிகளைக் கடத்த முயன்ற ஆடவனை போலீசார் தேடுகின்றனர்

கோலாலம்பூர், ஜூலை 20 – சிலாங்கூர், ஜெராமில் (Jeram) தாமான் ஈக்கான் இம்மாசில் (Taman Ikan Emas) இரு சிறுமிகளைக் கடத்த முயன்ற சந்தேகத்திற்குரிய ஆடவனை போலீசார் தேடிவருவதாக, கோலாசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் DSP முகமட் அம்பியா நோர்டின் ( Mohd Ambia Nordin ) தெரிவித்திருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு தண்டனை சட்டத்தின் 369 ஆவது விதி மற்றும் 31 உட்பிரிவு ( 1) விதியின் கீழ் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

புரோடுவா பேஷா (Perodua Bezza) கறுப்பு நிற காரில் 8 மற்றும் 6 வயதுடைய இரு சிறுமிகளை இழுத்துச் சென்ற ஆடவர் ஒருவரின் காணொளி வைரலானதை போலீசார் கண்டறிந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் அம்பியா தெரிவித்தார்.

தாமான் இம்மாஸ் (Taman Emas), ஜாலான் இம்மாஸ் 2 -யில் (Jalan Emas), அந்த இரண்டு சிறுமிகளும் விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த சிறுமிகளின் தாயார் நேற்று மாலை மணி 6.30 அளவில் ஜெராம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார்.

எனினும் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் தாமான் கிளிசாவிலுள்ள (Taman Kelisa) அந்த சிறுமிகளின் வீட்டிற்கு அருகே நேற்றிரவு மணி 7.45 அளவில் அவர்களை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

அந்த இரு சிறுமிகளும் பாதுகாப்புடன் இருப்பதோடு அவர்கள் எவ்வித காயத்திற்கும் உள்ளாகவில்லை. சம்பந்தப்பட்ட அந்த இரு சிறுமிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதனிடையே வீட்டிற்கு வெளியே தங்களது பிள்ளைகள் தனியாக இருந்தால் அல்லது விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி பெற்றோர்களை முகமட் அம்பியா கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!