
கோலாலம்பூர், ஆகஸ்ட்-25,சமூக ஊடகங்களிலும் வாட்சப் தளங்களிலும் பரவி வரும் ‘Perhimpunan Merah Maha Kali’ (மகா காளி சிவப்புப் பேரணி) தொடர்பான போஸ்டருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அப்பேரணியை தாம் ஆதரிப்பது போலவும், அதன் ஏற்பாட்டில் தமக்குத் தொடர்பு இருப்பது போலவும் தமது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக இனம், மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதே தமது கடமை என்று தெரிவித்த ராயர், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான எந்தவொரு விவகாரமும் சட்ட நெறிமுறைகளின்படியே தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
தவறான தகவல்களைப் பரப்பும் இந்தச் சுவரொட்டியை அனைத்து சமூக ஊடகத் தளங்களிலிருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்ட அவர், மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் இதுபோன்ற செயல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முன்னதாக இது குறித்து பெர்லிஸ் கங்கார் அம்னோ இளைஞர் பிரிவு போலீஸில் புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



