
சுங்கை பூலோ, ஜூலை 3 – சுங்கை பூலோ கம்போங் பாரு ஜாலான் ஹில்வியூ (Sungai Buloh Kampung Baru Jalan Hillview) பகுதியிலுள்ள கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 90 விழுக்காடு சேதமடைந்துள்ளது.
அதிகாலை தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுங்கை பூலோ (Sungai Buloh) மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் (Bukit Jelutong) தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 21 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் சென்றபோது தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், சுமார் 45 நிமிடங்களில் தீயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் 90 விழுக்காடு சேதமடைந்தது. இருப்பினும், எவ்வித உயிரிழப்பும் காயங்களும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.



