
மூவார், ஜூலை-3-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான சிறைத்தண்டனை விவகாரத்தில், DAP கட்சியின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் மாற்றமில்லாதது என, அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலையொட்டி மூவார், பக்ரி பகுதியில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும் என்றார்.
வெளியில் எதிர்ப்பது போல் எதிர்த்து, உள்ளுக்குள் நஜீப்பின் சாத்தியமான அரச மன்னிப்புக்கு DAP மூத்தத் தலைவர் ஒருவர் ஆதரவுத் தெரிவித்ததாகவும், இதனால் நம்பிக்கையிழந்தே DAP-யில் இருந்து அண்மையில் வெளியேறியதாகவும் கூறி முன்னாள் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அந்தோணி லோக், கட்சியை விட்டு வெளியேறும் நபர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது அரசியலில் இயல்பான ஒன்று என்றார்.
கட்சியின் போராட்டம் கொள்கை சார்ந்தது என்றும், தனிநபர்களைப் பொறுத்தது அல்ல என்றும் அவர் சாடினார்.
யார் என்ன சொன்னாலும், ஒரு பெரிய ஊழல் வழக்கில் நீதிமன்றம் தகுந்த தண்டனையை வழங்கியுள்ளதால், அந்தத் தண்டனை தொடர வேண்டும் என்பதில் DAP உறுதியாக உள்ளது என போக்குவரத்து அமைச்சருமான அவர் சொன்னார்.
SRC International ஊழல் வழக்கில் நஜீப் காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



