
கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- சிலாங்கூர், சுங்கை பூலோவில் வீடொன்றில் புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் முகமூடி அணிந்த நான்கு சந்தேக நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அச்சம்பவம் தொடர்பில் இன்று புகார் செய்யப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார்.
அக்கொள்ளையில் நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றன. மொத்த இழப்பு 35,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. அச்சம்பவம் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அக்கொள்ளை குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவ, விசாரணை அதிகாரி Sergeant Shamie Yusopப்பை 013-6463069 என்ற எண்ணிலோ அல்லது சுங்கை பூலோ மாவட்டக் காவல் தலைமையகத்தை 03-61561222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வீடொன்று அலங்கோலமாகக் காட்சியளித்த காணொளி ஒன்று முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது. அக்காட்சிகள் அவ்வீட்டில் சிலர் அத்துமீறி நுழைந்து கொள்ளையிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.
பணம், கைபேசி, நகைகள் மற்றும் தமது கடப்பிதல் ஆகியவை காணாமல் போயிருப்பதாக அக்காணொளியைப் பதிவிட்ட பெண் கூறியிருந்தார்.



