
கோம்பாக், ஏப்ரல்-20-கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தானிய ஆடவன், மீண்டும் போலீஸிடம் பிடிபட்டுள்ளான்.
Muhammad Hassan என்ற 24 வயது அந்நபர், சுமார் 9 நாட்களாக நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சனிக்கிழமை மாலை 5 மணியளவில் Jalan Gombak Lama பகுதியில் சிக்கினான்.
பல்வேறு தரப்பின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் பலனாக இக்கைது சாத்தியமானதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar தெரிவித்தார்.
ஷா ஆலம் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து சிறைக்குத் திரும்பியபோது, போலீஸ் பாதுகாப்பிலிருந்து அவன் தப்பிச் சென்றான்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக, பகல் நேரங்களில் காட்டுப் பகுதியிலும், இரவு நேரங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க கட்டுமானத் தளங்களுக்குள் நுழைந்தும் அவன் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அவ்வாடவன், தற்போது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளான்.



