கோலாலம்பூர், ஜூன் 7 – செர்டாங் போலீஸ் நிலையத்தின் வேலி மீது கடந்த வாரம் இரண்டு பூந்தொட்டிகளை வீசியதாக கொண்டுவரப்பட்ட கீழறுப்பு குற்றச்சாட்டை இரு பதின்ம வயதினர் ஒப்புக் கொண்டனர். சமூக நலத்துறையின் நன்னெறி அறிக்கை கிடைத்த பின்னர் அவ்விருவருக்கும் தண்டனை வழங்குவதற்கு ஆகஸ்டு 8ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட் பாஃரா அசுரா முகமட் சஹாட் ( Farah Azura Mohd Saad ) நிர்ணயித்தார். ஜூன் 2ஆம் தேதி காலை 6.30 மணியளவில் செர்டாங் போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவருக்கு சொந்தமான காரை சேதப்படுத்திய கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பதின்ம வயதுடைய இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனால் அக்கார் உரிமையாளருக்கு 500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுவரைக்குமான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 427 ஆவது விதி மற்றும் அதே சட்டத்தின் 34 ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது . இதற்கு முன்னதாக செர்டாங் போலீஸ் நிலையத்தின் வேலியை நோக்கி பூந்தொட்டிகளை வீசியதாக அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் தடுத்து வைக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் A.A அன்பழகன் கூறியிருந்தார்.