
கோலாலம்பூர், நவ 14 -ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல. மாறாக தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸன்டர் நந்தா லிங்கி ( Alexandar Nantha Linggi ) தெரிவித்தார்.
தற்போது எழுப்பப்படும் பிரச்னையை தனது அமைச்சு அறிந்திருப்பதாகவும், பொதுமக்களின் கவலைகளைப் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுப்பணி அமைச்சின் ஆய்வு மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜாலான் கெந்திங் ஹைலன்ஸிற்குரிய பாதை கூட்டரசு பாதை இல்லை. மாறாக தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது.
இருப்பினும், அத்தகைய எந்தவொரு பாதைக்கும் பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவை பெந்தோங் நகரான்மைக் கழகம் மூலம் பகாங் மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
தற்போது, இந்தப் பாதையின் மீது பொதுப் பணி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று அலெக்ஸான்டர் நந்தா லிங்கி இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸிற்குள் நுழையும் வாகனங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை கெந்திங் மலேசியா பெர்ஹாட் இதற்கு முன் உறுதிப்படுத்தியது.
இந்த தனியார் சாலைக்கான கட்டணம் குறித்த கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும் .
24 கிலோமீட்டர் நீளம் மற்றும் அதன் சரிவுகளின் பராமரிப்பு செலவுகள் 1960 களில் இருந்து நிறுவனத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதால், தனியார் சாலையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் அவசியம் என்று கெந்திங் மலேசியா வலியுறுத்தியது.



