ஜோகூர் பாரு, ஜூலை-30, ஜோகூர் பாரு, அரேனா லார்கின் MBJB நீச்சல் மையத்திலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில், e-coli கிருமி இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
முதன்மை நீச்சல் குளம், முக்குளிப்புக் குளம், கழிவறை, நீர் தேக்க டாங்கி உள்ளிட்ட இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து 9 நீர் மாதிரிகளிலும் அக்கிருமி கண்டறியப்பட்டது.
இரசாயணத் துறைக்கு ஞாயிற்றுக் கிழமை அனுப்பப்பட்ட நீர் மாதிரிகள் மீதான பரிசோதனை முடிவுகள் இன்று காலை கிடைக்கப்பெற்றதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹமட் ஹைரி மாட் ஷா (Mohd Hairi Mad Shah) தெரிவித்தார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தை நிர்வகித்தவர்கள் உரிய ஏற்பாட்டைச் செய்யாதது குறித்து அவர் ஏமாற்ற தெரிவித்தார்.
கடந்த வாரம் அங்கு நடைபெற்ற ஜோகூர் மாநில பள்ளிகளின் விளையாட்டு மன்றத்தின் (MSSJ) 2024-ஆம் ஆண்டுக்கான நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற 900 மாணவர்களில், 19 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
நீச்சல் குளத்தின் நீர் காரணமாக அவர்கள் வாந்தி, காய்ச்சல், தோல் அரிப்பு போன்ற உபாதைகளுக்கு ஆளாகி அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து அம்மையத்திற்கு விரைந்த மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி ( Datuk Onn Hafiz Ghazi), அங்குள்ள நீச்சல் குளங்களின் தூய்மை குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
பரிசோதனை முடிவுகள் தெரிய வரும் வரை, அந்த நீச்சல் குளங்கள் தற்காலிமாக மூடப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.