Latestமலேசியா

ஜோகூர் பாருவில் சோஃபாவில் ஏறி விளையாடியபோது விபரீதம்: 5வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது சிறுவன்

ஜோகூர் பாரு, மே-15-ஜோகூர் பாரு, பண்டார் ஊடா உத்தாமாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது சிறுவன் ஒருவன், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

​இந்தத் துயரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் அங்குள்ள ஒரு பொது வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

வரவேற்பறையில் ஜன்னலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சோஃபாவின் மீது ஏறி விளையாடியபோது, அந்தச் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இச்சம்பவம் நடந்தபோது சிறுவனின் பெற்றோர் வீட்டிலேயே இருந்துள்ளனர். எனினும், ஜன்னல் அருகே இருந்த சோஃபாவில் சிறுவன் ஏறியதை அவர்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது.

அப்போது ஜன்னல் பூட்டப்படாமல் இலேசாக திறந்த நிலையில் இருந்ததால் அவன் கீழே விழுந்தான்.

முகம், தலை, கழுத்து மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன், தற்போது அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அவனுக்கு உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து 2001 சிறார் சட்டத்தின் கீழ் போலீஸ் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

​உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள், ஜன்னல்களுக்கு அருகில் தளவாடங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு கம்பிகளைப் பொருத்துவது அவசியம் என்றும் போலீஸ் நினைவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!