ஜோகூர் பாரு, ஜூன் 8 – 2020 ஆண்டில் அறிமுகமான ஒருவரின் ஏற்பாட்டிலான வைப்புத் தொகை திட்டத்தில் கவரப்பட்டு அத்திட்டத்தில் இணைந்த தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் 1.2 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார். தனது சேமிப்பை இழந்த உள்ளூரைச் சேர்ந்த அந்த ஆடவர் ஒருவர் இது குறித்து ஜூன் 5 ஆம் தேதி போலீசில் புகார் செய்ததாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் ம.குமார் (M.Kumar) தெரிவித்தார். நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்த தமக்கு அறிமுகமான ஆடவர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் நிதி நிறுவனம் நிர்வகித்த இத்திட்டத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்ததாக பணத்தை இழந்த அந்த ஆடவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 1.8 மில்லியன் மதிப்புடைய பல்வேறு காசோலைகளை அந்த நபரிடம் ஒப்படைத்தாகவும் வைப்புத் தொகையின் லாப ஈவு தொகையை மீட்பதற்கு இம்மாதம் விண்ணப்பித்தபோது அந்த நபர் பல்வேறு காரணங்களை கூறியதால் தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்து போலீசில் புகார் செய்துள்ளார். இதனிடையே அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறும் முதலீட்டுத் திட்டங்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என பொதுமக்களை கமிஷனர் குமார் கேட்டுக்கொண்டார்.