ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 25 – பினாங்கு, ஜோர்ஜ் டவுன், சுங்கை நிபோங் பெசார், ஜமேக் பள்ளிவாசலுக்கு அருகே, கார் ஓட்டுனர் ஒருவரையும், பொதுமக்கள் சிலரையும் உட்படுத்திய சலசலப்பு தொடர்பில், புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்றிரவு மணி எட்டு வாக்கில், லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முஹமட் பிர்டாவுசின் உடல், சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள, இஸ்லாமிய மையத்துக் கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று நள்ளிரவு வாக்கில், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரான ஆடவர் ஒருவர் முன் வந்து புகார் செய்ததை, திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஷ்லாம் அப்துல் ஹமிட் உறுதிப்படுத்தினார்.
குற்றவியல் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படும் வேளை ; இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.
அச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காரின் முன் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்ட போதிலும், யாரும் காயமடையவில்லை.
முன்னதாக, அச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சில சமூக ஊடகங்களில் வைரலானது. நல்லடக்க சடங்கில் கலந்து கொள்ள திரண்டிருந்தவர்களால், பொறுமையிழந்த கார் ஓட்டி அந்த சலசலப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.