நியூயார்க், ஜூன் 12 – அமெரிக்க மருந்து மற்றும் அழகுசாதனப் பெருநிறுவனமான ஜான்சன் & ஜான்சன், தனது டால்கம் அடிப்படையிலான பவுடர் தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்காக, 70 கோடி அமெரிக்க டாலர்களை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக, நியூயார்க் சட்டத் துறை அறிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு, வட அமெரிக்க சந்தையிலிருந்து ஜான்சன் & ஜான்சன் தனது பொருட்களை மீட்டுக் கொண்டாலும், குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என, நியூயார்க் சட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நியூ ஜெர்சியை தளமாக கொண்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாக ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டதை அடுத்து, கொள்ளை அளவிலான ஒரு தீர்வை கடந்த ஜனவரியில் அறிவித்தது.
ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகள் ஏற்படுத்தி இருக்கும் பாதகங்களை சரிசெய்ய முடியாது. எனினும், அது ஏற்படுத்திய தீங்குகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறுதியாக உள்ளனர் என, நியூயார்க் சட்டத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதனால், தொடக்க கட்டமாக, அதற்கான தீர்வாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் நான்கு கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை, அந்நிறுவனம் மூன்று ஆண்டுகளில் நான்கு தவணையாக செலுத்தும் எனவும் அது கூறியுள்ளது.
இவ்வேளையில், தனது தரப்புக்கு எதிரான வழக்குகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுக் காண, பல்வேறு வழிகள் கையாளப்படுமென, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உலகளாவிய சட்ட துணைத் தலைவர் எரிக் ஹாஸ் (Erik Haas) கூறியுள்ளார்.