புது டெல்லி, மே-18 – இந்தியாவின் Chandigarh-ரில் நம்மூரில் Roti Canai என்றழைக்கப்படும் பரோட்டா ரொட்டியை அங்காடி வியாபாரி ஒருவர் டீசல் எண்ணெயில் போட்டுச் சுட்டெடுப்பதாகக் கூறப்படும் காணொலி வைரலாகியுள்ளது.
சாலையோரம் பரோட்டா விற்பவரான அந்த நடுத்தர வயது ஆடவர், சட்டியில் வெந்துக் கொண்டிருக்கும் பரோட்டாவின் மேற்பரப்பில் டீசலை ஊற்றுவது, வைரலான அந்த 3 நிமிட வீடியோவில் தெரிகிறது.
‘இது டீசல் பரோட்டா’ என பெருமையாகக் கூறிக் கொண்ட அவர், டீசலைப் பயன்படுத்துவதால் பரோட்டாவின் சுவை மேலும் கூடுவதாகச் சொன்னார்.
நெட்டிசன்கள் முகம் சுளித்தாலும், அந்த ‘டீசல் பரோட்டா’வுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்து வருகிறது.
ஒரு நாளைக்கு 300 பரோட்டா வரையிலும் விற்று அவர் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
எனினும் வீடியோ வைரலாகி, இப்போது அவரின் வியாபாரத்திற்கே உலை வைத்து விட்டது.
சமையலுக்கு டீசல் எண்ணெயைப் பயன்படுத்துவதா என சினமடைந்த பொது மக்களில் சிலர் இந்திய உணவு சுகாதார மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் புகாரளித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் வைரலான வீடியோவில் கூறப்பட்டவை உண்மையல்ல என்றும், பாதுகாப்பான சுத்தமான எண்ணெய் மட்டுமே பரோட்டா சுட பயன்படுத்தப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட வியாபாரி விளக்கமளித்துள்ளார்.
Food Vloger ஒருவர் தனக்கு Content வேண்டும் என்பதற்காக அப்படியொரு வீடியோவைப் பதிவுச் செய்து பகிர்ந்திருப்பதாக பரோட்டா வியாபாரி சொன்னார்.
வீடியோவை எடுத்து பகிர்ந்த நபரும் தமது அச்செயலுக்கு மன்னிப்புக் கோரி வீடியோவை நீக்கி விட்டார்.
இருந்தாலும், அந்த பரோட்டா வியாபாரியின் மீது இன்னமும் சந்தேகம் குறையாத சில நெட்டிசன்கள், எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.