கோலாலம்பூர், ஜுலை 15 – எதிர்காலத்தில், டீசல் எரிபொருளின் விலை உயரும் பட்சத்தில், புடி மடானி டீசல் மானியத்தை அரசாங்கம் மறுஆய்வுச் செய்யும்.
DOSM எனும் புள்ளியியல் துறை ஆய்வின் அடிப்படையில், கூடுதல் மாதாந்திர டீசல் செலவுகளை ஈடுகட்ட, தற்போது வழங்கப்படும் 200 ரிங்கிட் உதவித் தொகை போதுமானது என, நிதி துணையமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) தெரிவித்தார்.
டீசல் மானியத்தை அரசாங்கம் அவ்வப்போது மறுஆய்வுச் செய்யும்.
அதே சமயம், தற்போது வழங்கப்படும் 200 ரிங்கிட் டீசல் மானியம், வாகன உரிமையாளர்கள், பொருளாதார மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வு மற்றும் கலந்துரையாடல்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
DOSM வெளியிட்ட, 2022 குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வு அறிக்கையின் தரவுகள் அடிப்படையில், தீபகற்ப மலேசியாவிலுள்ள, 80 விழுக்காட்டு குடும்பங்களுக்கு, கூடுதல் மாதச் செலவுகளை ஈடுகட்ட 200 ரிங்கிட் போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.