ஷா ஆலாம், மே 17 – தமக்கு எதிரான இரு நிந்தனை குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ மஹமட் சனுசி மாட் நோர் செய்திருந்த சீராய்வு மனுவை, தேசிய சட்டத்துறை அலுவலகம் இன்று தள்ளுபடி செய்தது.
அதனை, அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ மஸ்ரி முஹமட் டாவுட் தெரிவித்தார்.
அந்த முடிவு, இம்மாதம் மூன்றாம் தேதி கடிதம் ஒன்று வாயிலாக, சனுசி தரப்பு வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் மஸ்ரி சொன்னார்.
அதனை பின்னர் சனுசியின் வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜெயா அவாங்கும் நீதிபதி முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.
அதன் வாயிலாக, சனுசிக்கு எதிரான வழக்கு விசாரணை இதற்கு முன் நிர்ணயிக்கப்பட்டதை போல, ஜூலை 22,23,29,30-ஆம் தேதிகளிலும், ஆகஸ்ட்டு 5,6,9,12,13 மற்றும் 23-ஆம் தேதிகளிலும் நடைபெறும்.
கடந்தாண்டு ஜூலை 11-ஆம் தேதி, கோம்பாக், தாமான் செலாயாங் முதியாரா – கம்போங் பெண்டாஹாரா எனுமிடத்தில், 50 வயது சனுசி இரு நிந்தனை கூற்றுகளை வெளியிட்டதாக இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐயாயிரம் ரிங்கிட் வரையிலாக அபராதம் அல்லது மூன்றாண்டுகள் வரையிலாக சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.