Latestஇந்தியாஉலகம்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்றைய வாக்களிப்பில் தீர்மானிக்க வெளிநாட்டு வாக்காளர்கள் சொந்த ஊருக்குப் படையெடுப்பு

சென்னை, ஏப்ரல்-23-பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி காலை 7 மணி அதாவது மலேசிய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் அனைத்து 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

இதனிடையே, வரலாறு காணாத வகையில் வெளிநாடுகளிலிருந்து மிக அதிகமானோர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊர் திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இளைஞர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, வளைகுடா போன்ற நாடுகளிலிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து போன்ற வட்டார நாடுகளிலிருந்தும், இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க படையெடுத்துள்ளனர்.

ஏராளமான விமானங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.

அவ்வகையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி சென்ற விமானமொன்றில் தமிழக வாக்காளர்கள் நிறைந்திருந்த வீடியோ வைரலாகியுள்ளது.

விமானியும் பயணிகளும் வாக்களிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் அவ்வீடியோ 24 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் பார்வைகளை கடந்து, இணையத்தை அதிர வைத்துள்ளது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 8,000 அனைத்துலகப் பயணிகள் வந்திறங்கும் நிலையில், தேர்தல் நேரத்தில் அவ்வெண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்றவற்றோடு, தமிழக வெற்றிக் கழகம் மூலம் நடிகர் விஜயும் அரசியலில் குதித்துள்ளதால், இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே பெரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே பரபரப்பு வாக்குப் பெட்டிகள் வரை நீடித்தால், வரலாறு காணாத வாக்குப் பதிவு விழுக்காட்டை தமிழகம் சந்திக்கும் என்பது நிச்சயம்.

தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!