கோலாலம்பூர், மே 23 – தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதி ஒருவரும் கிள்ளானைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரும் மேற்கொண்டுவரும் சட்ட மிரட்டல் மற்றும் தனிநபர் தாக்குதல் குறித்து தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷீல் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு அவரை சந்திப்பதற்கு MIJA எனப்படும் மலேசிய இந்திய ஊடகவிலாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. தமிழ் ஊடகங்கள் மற்றும் அதன் நிருபர்களுக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்புவதும் , வழக்கு தொடுப்போம் என்று மிரட்டுவதும், பத்திரிகை நிருபர்கள் மீது அவதூறான செய்திகளை வெளியிடும் போக்கும் கடுமையானது என்பதோடு கண்டிக்கத்தக்க ஒன்று என மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கிள்ளானைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மூன்று பத்திரிகை நிருபர்களுக்கு எதிராக ஒரு பத்திரிகையில் மிகவும் மோசமாக எழுதிய வார்த்தை குறித்து சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். தங்களுக்கு எதிராக பொய்யாக எழுதப்பட்ட குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பத்திரிகையாளர்கள் போலீசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஒற்றுமை அரசாங்கத்தின் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த விவகாரம் தொடர்பில் அவரை விரைந்து சந்திப்பதற்கு மலேசிய இந்திய ஊடகவியலாளர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் குணாளன் மணியம் தெரிவித்திருக்கிறார்.