கோலாலம்பூர், ஜூன் 11 – தலைநகர், பாசார் செனி அருகே, நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவரின் கைபேசியை, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், பறித்துச் செல்லும் “டேஷ்கேம்” வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
இம்மாதம் எட்டாம் தேதி, சனிக்கிழமை, நண்பகல் வாக்கில் நிகழ்ந்த அந்த வழிபறி சம்பவம் தொடர்பான, டேஷ்கேம் பதிவை, @ckinasikin என்பவர் தனது X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட நபருக்கு, வழிபறி தொடர்பான பதிவு என்னிடம் உள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் என்னை தொடர்புக் கொள்ளுங்கள்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பாதசாரி ஒருவர் சாலையோரத் தடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டே, கைபேசியை பயன்படுத்துவதை காண முடிகிறது.
அப்பொழுது, மோட்டார் சைக்கிளில் வரும் நபர் ஒருவர், கைபேசியை பறித்து கொண்டு, கார்களுக்கு இடையில் புகுந்து தப்பிச் செல்கிறார்.
பாதசாரி அந்த மோட்டார் சைக்கிளோட்டியை துரத்திக் கொண்டு ஓடுவதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், வெளிநாட்டு சுற்றுப்பயணி என நம்பப்படும் வேளை ; இணையவாசிகள் பலர் அச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“திருடன் மிக விரைவில் பிடிபட வேண்டும்” என அதில் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“கைபேசியில் கவனம் செலுத்திக் கொண்டே, வேறு எதையும் கவனிக்க தவறுபவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக அமையட்டும்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.