
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-13-நாட்டின் புகழ்பெற்ற சட்டத்துறை ஆளுமையுமான தான் ஸ்ரீ நளினி பத்மநாதன், மலாயா பல்கலைக்கழக சட்டப் புலத்தின் சிறப்பு இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயரிய நியமனத்திற்கு UM நிர்வாகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதியான தான் ஸ்ரீ நளினியின் வருகை, பல்கலைக்கழகத்தின் கல்விச் சமூகத்திற்குப் பெருமிதம் அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சட்டத்துறையில் அவருக்கும் இருக்கும் பலத்த அனுபவம், பரந்த அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவை, பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்நியமனம் UM சட்டப் புலத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் என பல்கலைக்கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் எதிர்கால சட்ட வல்லுநர்களை உருவாக்குவதில் தான் ஸ்ரீ நளினியின் பங்களிப்பை ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் ஆவலோடு வரவேற்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



