
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-3-உலு சிலாங்கூர் பள்ளியொன்றில் ஆசிரியை சுதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் தங்களின் ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, இணையத்தில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
மறைந்த சுதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்த அவரின் சகோதரி நந்தினி மூர்த்தி, இந்தத் துயரமான தருணத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் குடும்பத்தார் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில், அவரது மறைவு குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யானத் தகவல்கள் மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் குறித்து எச்சரித்த அவர், இச்சம்பவம் தொடர்பாக போலீஸில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.
போலீஸார் சுதந்திரமாக விசாரணை நடத்தப் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் நந்தினி கேட்டுக்கொண்டார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதைத் தவிர்த்துத் தங்களின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொண்ட அவரின் குடும்பத்தினர், இச்சம்பவம் தொடர்பாக உறுதியானத் தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது +60 16-212 6455 எனும் எண்ணில் ரமணியையோ தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சுதா, வெள்ளிக் கிழமை காலை பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்; உடனடியாக குவாலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறையில் சவப்பரிசோதனை நடத்தப்பட்டு, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



