
பேங்காக், ஆகஸ்ட்.05- தாய்லாந்தின் Chaiyaphum பகுதியில், 130 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படும் மாமிசம் உண்ணும் டைனோசரின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கண்டறியப்பட்ட டைனோசர் புதைபடிவங்களிலேயே அதுவே மிகவும் பழமைமிக்கதாகும்.
Ban Khwao மாவட்டத்தில் உள்ள Ban Mai Nong Daeng கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள ஒரு பகுதியில், தகன மேடை அமைப்பதற்காக கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலத்தைச் சரி செய்த போது அப்புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டதாக The Thaiger செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அது அங்கு கண்டெடுக்கப்பட்ட நான்காவது டைனோசர் புதைபடிவங்களாகும்.
முதலில் புதைபடிவங்கள்களின் சிதைந்த பகுதிகளைக் கண்டுபிடித்த 53 வயதான Yodsanya என்பவர் ஆய்வுக் குழுவொன்றை அங்கு அழைத்துச் சென்றதை அடுத்து அத்தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Yodsanya பின்னர் பல எலும்புத் துண்டுகளைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் டைனோசரின் புதைபடிவங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் இதுவரை அந்த டைனோசரின் முதுகெலும்புகள், கால் எலும்புகள், மூட்டுகள், கணுக்கால்கள், கால்விரல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட புதைபடிவத் துண்டுகளை மீட்டுள்ளனர். அவை மேலதிக ஆய்வுக்காக ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அதே வேளை, சுண்ணாம்புப் பாறை அடுக்குகளுக்கு அடியில் புதைந்திருப்பதாக நம்பப்படும் எஞ்சியுள்ள டைனோசர் எச்சங்களைத் தேடும் அகழ்வாராய்ச்சிப் பணிகளும் தொடர்கின்றன. ஆய்வுகள் முடிந்ததும், உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஒரு கற்றல் மையமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.



