கோலாலம்பூர், ஆக -பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் லீ ஷி ஜியாவை (Lee Zii Jia) தோற்கடித்த தாய்லாந்து போட்மிண்டன் விளையாட்டாளர் Kunlavut Vitidsarn- வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். ஒற்றையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற Kunlavut ட்டை ஹன்னா இயோ பாராட்டியதோடு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். Kunlavut பேட்மிண்டன் விளையாடும் பாணியை தாம் மிகவும் ரசித்ததோடு மிகவும் பொறுமையாக விளையாடி புள்ளிகளை பெற்றதாகவும் தாம் அவரது ரசிகராகிவிட்டதாக ஹன்னா இயோ பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர்.
ஹன்னா இயோ தேசப்பற்று இல்லாதவராக நடந்துகொண்டதோடு நம் நாட்டின் விளையாட்டாளரை தோற்கடித்த ஆட்டக்காரரை புகழ்வதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என Fzeyma 92 என்ற பயனர் சாடினார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரின் நடவடிக்கை இப்படித்தான் இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதே வேளையில் சிலர் ஹன்னா இயோவை பாராட்டினர். உண்மையான விளையாட்டு உணர்வு மற்றும் நட்புறவு அடிப்படையில் ஒருவரின் வெற்றியை பாராட்டுவதில் எந்தவொரு தப்பும் இல்லையென்று நெட்டிசன் தெரிவித்தார். இதற்கு முன்னதாக வெண்கலப் பதக்கம் வென்ற லீ ஷியா ஜியாவை பாராட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஹன்னா இயோ பதிவிட்டிருந்தார்.