கோலாலம்பூர், ஏப்ரல் 22 – திரங்கானு, கெமமானில், பிறந்து மூன்று மாதங்களே ஆன தனது பெண் குழந்தைக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையை பிரசவித்த பின்னர் மன உளைச்சலில் இருந்த போது அப்பெண் குழந்தைக்கு மரணம் விளைவித்ததால், அவர் அக்ககுற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதாக, கெமமான் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதோடு, 32 வயது நூர் நஜிஹா சுல்கிபிலி எனும் அப்பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டை, அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால், அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.
அதனால் அப்பெண் குற்றம்சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டதை, அவரது வழக்கறிஞரும் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, மடினா சாண்ட்ரா முஹமட் சாட்லிக்கு மரணம் விளைவித்ததாக அப்பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தார்.
2019-ஆம் ஆண்டு, செப்டம்பர் 11-ஆம் தேதி, காலை மணி 11.30 வாக்கில், நெராம் 2-டிலுள்ள, பெல்டா குடியிருப்பில் அவர் அக்குற்றத்தை புரிந்த்தாக தெரிவிக்கப்பட்டது.
பலவீனமாக காணப்பட்ட அக்குழந்தையை அதன் தந்தை, சுக்காய், செனா சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்ததை அடுத்து, அப்பெண் கைதுச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.