சென்னை, நவம்பர்-19 – தமிழகம், திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள தெய்வானை யானை, திடீரென ஆவேசமடைந்து பாகன் உள்ளிட்ட இருவரை மிதித்துக் கொன்றிருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைதியான சுபாவத்தோடு கோவிலுக்கு வரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கி பிரபலமாகத் திகழ்ந்து வந்தது அந்த தெய்வானை யானை.
இந்நிலையில், நேற்று பிற்பகல் வாக்கில் யானைக்குப் பழம் கொடுப்பதற்காக பாகனுடன் அருகில் சென்ற நபரை தெய்வானை ஆவேசமாகக் கீழே தள்ளி காலால் மிதித்து நசுக்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாகன், யானையை மேலும் தாக்க விடாமல் தடுக்க முயன்றார்; ஆனால் அவரையும் யானை தும்பிக்கையால் தள்ளி சுவற்றில் தூக்கி எறிந்தது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, யானைப் பாகன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வழக்கமாக பெண் யானைக்கு மதம் பிடிக்காது என்ற நிலையில், தெய்வானை திடீரென ஆக்ரோஷமானதற்கான காரணத்தைக் கண்டறிய வனத்துறையின் மருத்துவக் குழு அதனைப் பரிசோதனை செய்து வருகிறது.
சம்பவத்துக்கு முன் யானையின் குணாதிசயம் எப்படி இருந்தது என்பதைக் கண்டறிய CCTV காட்சிகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.