Latestமலேசியா

துபாயில் சிக்கியுள்ள மலேசியர்களுக்கு உதவவில்லையா? விஸ்மா புத்ரா மறுப்பு

புத்ராஜெயா, மார்ச்-4-மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து, துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள மலேசியத் தூதரகம் உதவவில்லை எனக் கூறப்படுவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மாறாக, 24 மணி நேரமும் இடைவிடாமல் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன; மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவித் தேவைப் படுவோருக்கும், அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கும் அதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அது தெளிவுப்படுத்தியது.

துபாயில் திடீரென வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான மலேசியர்களின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது; எனவே தான் வாரக் கடைசி நாட்களிலும் கூட அபு தாபியில் உள்ள மலேசியத் தூதரகமும் துபாயில் உள்ள பேராளரகமும் அயராது பணிகளை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சு கூறிற்று.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் மத்தியக் கிழக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 29,000 மலேசியர்கள் இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

ஐக்கிய அரபு சிற்றரசில் மட்டுமே 8,500 மலேசியர்கள் உள்ளனர்.

அவர்களில் 5,900 பேர் முறைப்படி தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ளனர்.

எனவே இந்த பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு உதவுவது பெரும் சவாலாகும்.

என்றாலும், எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து மலேசியர்களின் நலன்களைப் பாதுகாப்பதே தங்களின் முன்னுரிமை என விஸ்மா புத்ரா கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!