வாஷிங்டன், ஜூலை-15 அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிராம்ப் (Donald Trump) மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிக்கு முன்பாக அவருக்குக் கூடுதல் பாதுகாப்புத் தரப்படவில்லை எனக் கூறப்படுவதை இரகசிய சேவை நிறுவனம் ( The Secret Service) மறுத்துள்ளது.
குடியரசு கட்சியினர் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்களிடமிருந்து வந்துள்ள அக்குற்றச்சாட்டில் உண்மையில்லையென, பாதுகாப்புக்குப் பொறுப்பான அந்நிறுவனத்தின் பேச்சாளர் சொன்னார்.
அதிபர் தேர்தல் பிரச்சாம் சூடுபிடித்து வருவதால், பாதுகாப்பு அம்சம் எவ்வவு முக்கியமென எங்களுக்குத் தெரியாமலில்லை.
போதுமான அளவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தோம் என்றார் அவர்.
டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் கவனத்தை அந்த இரகசிய சேவை ஏஜென்டுகள் பக்கமாகத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதில் காதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்ட பார்வையாளர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படும் இளைஞன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் டிரம்ப் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்தது உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.