பாரீஸ், ஜூலை 27 – பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது தென் கொரிய அணி, தவறுதலாக வட கொரியா என அறிமுகப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புப் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Seine (செய்ன்) நதிக்கரையில் ஒவ்வொரு நாட்டுப் போட்டியாளர்களும் படகுகளில் அணிவகுத்துச் சென்ற போது அத்தவறு நிகழ்ந்தது.
தென் கொரிய அணி கடந்துச் செல்லும் போது, வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரான ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு’ என நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பிரஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் தவறாக அறிமுகப்படுத்தினர்.
எனினும் வட கொரிய விளையாட்டாளர்கள் அணிவகுத்துச் சென்ற போது அந்நாட்டின் பெயர் சரியாக உச்சரிக்கப்பட்டது.
அறிவிப்பில் நிகழ்ந்த கோளாறு தொடர்பில் ஏமாற்றம் தெரிவித்த தென் கொரிய விளையாட்டுத் துறை அமைச்சர், அது குறித்து ஏற்பாட்டுக் குழுவிடம் புகாரளிக்கப்படுமென்றார்.
அனைத்துலக ஒலிம்பிக் மன்றமும் (IOC) அச்சம்பவத்திற்காக தென் கொரியாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கொரிய தீபகற்பம் வட கொரியா, தென் கொரியா என இரண்டாக உடைந்ததில் இருந்து இரு நாடுகளுக்கியிடையில் பதட்டம் நீடித்து வருகிறது.
தென் கொரியா இம்முறை 143 போட்டியாளர்களையும், வட கொரியா 16 விளையாட்டாளர்களையும் பாரீசுக்கு அனுப்பி வைத்துள்ளன.